7. கூட்டு முயற்சியே வலுவானது

பின்லாந்து கல்விப் பயணம் – 7

கூட்டு முயற்சியே வலுவானது.

பத்து ஒன்றுகள் சேர்ந்தால் பத்து என்பது கணக்கு. ஆனால் பத்து மனிதர்கள் சேர்ந்தால் பத்து மனிதர்களின் தனிப்பட்ட ஆற்றலைவிட பலமடங்கு ஆற்றல் அங்கு உருவாகிறது. இதை ஆங்கிலத்தில் synergy என்று சொல்வார்கள்.
நாங்கள் பார்த்த பள்ளியில் இது எப்படி செயலாக்கம் பெறுகிறது என்று பார்ப்போம்.

புதன் கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஒன்றரை மணிநேரம் வீதம் திட்டமிடுவதற்காக மாற்றி வைக்கப்படுகிறது. வாரத்திற்கு மூன்று மணிநேரம் திட்டமிட எடுத்துக்கொண்டாலும் கற்பித்தல் என்பது 24 மணி நேரம் நடக்கிறது என்றார் என்னிடம் பேசிய ஆசிரியர்.
காரணம் காலை எட்டரை மணிக்குப் பள்ளி தொடங்கினாலும் எப்போது முடியும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அது ஆசிரியர் திட்டமிடுவதைப் பொறுத்து அமையும். சில குழந்தைகள் கூடுதலாக வேற்று மொழிகளைக் கற்க விரும்பினால் அந்த நேரம் மீண்டும் மாறுபடும். அந்த மொழி கற்பிக்கும் ஆசிரியர் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும்போது இவரும் கூட இருக்கும் நிலை ஏற்படலாம்.

இந்த இரண்டு விஷயங்களில் முதலில் திட்டமிடுவதை எடுத்துக்கொள்வோம். ஓர் ஆசிரியர் ஒரு பிரிவேளை ஒரு வகுப்பில் என்பது இங்கு மிகவும் அரிது. இருவர் இருவராக வகுப்பை நடத்துகிறார்கள். ஒருவர் நடத்த ஒருவர் கவனிக்க இடையே அவர் நடத்த இவர் கவனிக்க… என்னும் குழுக் கற்பித்தல் நடக்கிறது. இதையும் தாண்டி வகுப்பறையில் வேறு செயல்பாடு நடக்கும் தேவை ஏற்பட்டால், எடுத்துக்காட்டாக பாட்டுப் பாட வேண்டும், படம் வரைய வேண்டும் என்றால் அத்திறமையுள்ள ஆசிரியர் வந்து அதை நடத்தி உதவுவார்.

எல்லோருக்கும் எல்லாத் திறமையும் இல்லை. ஆனால் பள்ளியில் இருக்கும் அனைவரும் சேரும்போது எல்லா திறமைகளும் உள்ள பள்ளியாக அது மாறுகிறது. குழுவாக வேண்டுமா, பிறரை அழைக்க வேண்டுமா, எத்தனை நேரம் எடுத்துக்கொள்வது, யார் யார் எப்போது பொறுப்பை மாற்றுவது என்பவை அனைத்தும் குழந்தைகளின் கற்றல், குழந்தைகளின் திறன் வளர்ச்சி. அதற்கு எது முக்கியமோ அதுவே முடிவு செய்கிறது.

(என் கருத்து – இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய கருத்து இது. ஆனால் நம் பள்ளிகளில் சீனியர் ஜுனியர் போர் சொல்லி மாளாது. பத்து பேருக்கு இருபது குழுக்கள். மனம் திறந்து கேள்வி கேட்க, கலந்துரையாட, சீனியராக இருந்தாலும் அவருடைய செயல்பாட்டில் குறைசொல்ல… என எல்லாவற்றுக்கும் தயக்கம். அவர் என்ன நினைப்பாரோ. என் மதிப்புக் குறைந்துவிடுமோ… என்ற என்னென்னவோ எண்ணங்கள் ஒவ்வொரு ஆசிரியரையும் ஒவ்வொரு தீவாக மாற்றி விடுகின்றன)

பள்ளியில் உருவாகும் பிரச்சனைகளை கல்வி ஆலோசகரிடம் கலந்துரையாடப்படுகின்றன. அவர் வகுப்பைக் கவனிக்க வரும்போது ஒருபோதும் கண்காளிப்பாளராக வருவதில்லை. அல்லது கண்காளிப்பாளராகக் கருதப்படுவதில்லை. குழந்தைகளின் திறன் வளர்ச்சி, குழந்தைகளின் மகிழ்ச்சியான கற்றல் என்னும் பொதுவான இலக்குகளை அடைய உழைக்கும் குழுவில் ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. அதுவன்றி அவர் தன்னுடைய அதிகாரத்தைக் காட்ட வருவதில்லை. மட்டுமல்ல பிறர் அளவுக்குக் கற்பிக்கும் திறன் எனக்கு இல்லையென்றாலும் என்னால் இந்தப் பள்ளியில் நடக்கும் வேறுபல செயல்பாடுகளில் ஆக்கம் செலுத்த முடிகிறது. அவற்றை மேம்படுத்த முடிகிறது என்ற எண்ணம் ஓர் ஆசிரியரைத் தாழ்வுணர்ச்சியிலிருந்து காப்பாற்றுகிறது என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு பள்ளியின் சூழல், குழந்தைகளின் விருப்பு வெறுப்புகள், ஆசிரியர்களின் திறன், பள்ளி முதல்வரின் ஆளுமை… என எல்லாம் சேர்ந்து ஒரு பள்ளியைப் பிற பள்ளியிலிருந்து மாற்றுகிறது. எல்லா பள்ளிகளும் ஒரு கட்டகத்திற்கு (Frame work) உட்பட்டு செயல்பட்டாலும் தனித்தனி செயல்பாடுகளை வடிவமைக்கலாம் இணைத்துக்கொள்ளலாம். கல்வி ஆலோசகர் பிறபள்ளியில் நடக்கும் நல்ல எடுத்துக்காட்டுகளை, பிரச்சனைகளைத் தீர்த்த விதத்தை வேறொரு பள்ளியில் பகிர்ந்துகொள்கிறார் எனினும் அப்பள்ளி அத்தீர்வை அதுபோல் எடுத்துக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை.

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நாட்டிலுள்ள கடைக்கோடி மனிதனின் வாழ்வில் நல்ல மாற்றத்தை விளைவிக்குமானால் அது சரியான முடிவு என்று எடுத்துக்கொள்ளலாம் என்று தேசத்தந்தை கூறியது போல் பள்ளியில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் குழந்தையின் மகிழ்ச்சி, திறன் வளர்ச்சி, எதிர்காலம் ஆகியவற்றுக்கு உதவுகிறது என உறுதிப்படுத்துகிறார்கள்.

என் தனிப்பட்ட கருத்து…

ஒரு பகுதியில் வசிக்கும் அனைவரின் குழந்தைகளும் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியிலேயே சேர வேண்டும் என்பதால் பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளியில் மாணவர் எண்ணிக்கைக் குறைந்துவிடும் (அதன் விளைவு என்னவென்று தெரியுமே) என்ற அழுத்தம் இல்லை. அதனால் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் முழுக் கவனமும் செலுத்த முடிகிறது. நம் நாட்டில் இந்நிலைமை இல்லை. அதனால் பெற்றோர்களைக் கவர, அவர்தம் கல்விபற்றிய தவறான கருத்துகளுக்கு மேலும் வலுவூட்டும் செயல்களில் நாம் இறங்குகிறோம். கற்றல் கற்பித்தலில் நம்மால் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் ஒவ்வோர் கல்வி ஆண்டின் துவக்கத்திலும் வயிற்றில் புளியைக் கரைக்கும் உணர்வு ஏற்படுகிறது.

ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s