8. செய்தித் துணுக்குகளும் என் கருத்தும்

பின்லாந்து கல்விப் பயணம் – 8

செய்தித் துணுக்குகளும் என் தனிப்பட்ட கருத்தும்

1. வகுப்பறைகள் பெரியதாக இருந்தாலும் நாம் மெதுவாகப் பேசினாலும் அனைவருக்கும் கேட்கும்படி ஒலிக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆசிரியரின் சிரமத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது.
2. சுத்தம் சுத்தம் அப்படியொரு சுத்தம். பள்ளியும் வகுப்பறைகளும் துடைத்து வைத்த கண்ணாடி போல் பளிச்சென்று இருக்கின்றன.
3. குழாயில் வரும் நீரை நேரடியாகக் குடிக்கலாம். நெகிழிக் குடுவைகளில் தண்ணீர் கொண்டுவரும் தேவை ஏற்படுவதில்லை.
4. வகுப்பறைக்குள் நுழைய பள்ளியில் பணிபுரிபவர்களால் மட்டுமே முடிகிறது. கதவைத் திறப்பதற்கான சாவி அவர்களிடம் மட்டுமே உள்ளது. அது ஒவ்வொருவரின் கழுத்திலும் தொங்கிக்கொண்டிருக்கிறது.
5. கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் கட்டடத்திற்கு உள்ளேயே இருக்கிறது. விளையாடும்போது சத்தம் வெளியே கேட்பதில்லை.
6. அந்தந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களின் குழந்தைகள் அப்பகுதியில் அமைந்திருக்கும் பள்ளியிலேயே படிப்பதாலும், அனைத்தும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆனதாலும் பள்ளியின் முன் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும் நம்மூர் காட்சியைக் காண முடியாது.
7. கற்பித்தல் முறை பற்றி பெற்றோருடன் கலந்துரையாட pedagogic café என்ற முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெற்றோர்களின் ஐயங்களுக்கு இந்நிகழ்ச்சியின் போது விளக்கம் அளிக்கப்படுகிறது.
8. ஆண்டுக்கு ஒரு முறை அனைத்துப் பெற்றோர்களும் பங்குபெறும் ஆசிரியர் பெற்றோர் கூட்டம் நடக்கிறது.
9. ஒரு செயல்பாடு முடிந்ததும் ஆடலாம் பாடலாம் நேரம் வழங்கப்படுகிறது. குழந்தைகள் அவரவருக்கு விருப்பம் போல் ஆடலாம் பாடலாம்.
10. ஆடலாம் பாடலாம் நேரம் முடிந்த்தும் ஒரு நிமிடம் அமைதியாக இருக்க வேண்டும்.
11. சில பிரிவேளைகளில் இரண்டு வகுப்புக் குழந்தைகளும் ஒன்றாக இருப்பார்கள். பொதுவான சில செயல்பாடுகள் நடக்கும். அதற்குப் பிறகு அவரவர் வகுப்புக்குச் செல்லலாம்.
12. இவை பள்ளிக்குப் பள்ளி மாறுபடும். மேற்குறிப்பிட்ட எங்கள் குழுவுக்கு முதல்வர் அளித்த பதில்கள்

பின்லாந்து ஒரு வளர்ந்த நாடு. பொருளாதாரத்திற்கு எந்தக் குறையும் இல்லை. இவற்றையெல்லாம்விட மக்கள் தொகை மிக மிகக் குறைவு. அதனால் ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. வேலையில்லாவிட்டாலும் உணவு, உடை இருப்பிடம், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் அரசால் இலவசமாகவும் குறைந்த செலவிலும் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் ஆற அமர ஆலோசிக்கலாம். திட்டங்கள் தீட்டலாம். நடைமுறைப்படுத்தலாம். நம் நாடு அந்த நிலையை அடைய பல காலம் தேவைப்படலாம்.

அதனால் ….

பின்லாந்தில் நடைமுறைப்படுத்தும் எல்லா முறைகளும் நம் நாட்டில் வெற்றி பெற வேண்டும் என்று எதிர் பார்க்கக்கூடாது. அந்த நாட்டில் அமலாக்கப்படும் திட்டங்கள் நம் நாட்டில் படுதோல்வியைத் தழுவலாம். இருப்பினும் ஒரு சில அடிப்படைக் கருத்துகளை நாம் கருத்தில் கொள்வது நல்லது. எடுத்துக்காட்டாக கல்வித்துறையில், பள்ளியளவில் எந்த திட்டம் தீட்டினாலும் அது குழந்தையின் மகிழ்ச்சியான கற்றலுக்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பதின் அடிப்படையில் முடிவு செய்யலாம். குழந்தைகள் அவசரமாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காமல் சற்று பொறுமை காக்கலாம். ஆசிரியரின் திறன் வளர்ச்சி முதலிடம் கொடுக்கலாம். ஆசிரியர்களுக்காகவும் முதல் முடக்கலாம். எந்தக் கருத்தையும் உறுதியாக நம்பாமல் எதிர்த்தும் விமரிசத்தும் வந்துள்ள கருத்துகளையும் படித்துப் பார்த்து, நாமே சில ஆய்வுகள் நடத்திப் பார்த்து, நம் வாழ்வோடு ஒப்பிட்டு, அப்புறம் ஏற்றுக்கொள்ளலாம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது அதற்கேற்ப நம் செயல்கள் இருக்கின்றனவா எனச் சுயபரிசோதனை செய்யலாம்.

இத்தொடரில் கூறப்பட்டுள்ள கருத்துகள் யாவும் ஐந்து நாட்கள் அங்குள்ள ஆசிரியர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடியபோது கிடைத்தவை. கல்வியாளர்கள், கல்வி அமைச்சர், மேயர் ஆகியோரின் உரைகளிலிருந்து எடுத்தவை. இருப்பினும் எங்கேனும் என்னையறியாமல் என்னுடைய தனிப்பட்ட கருத்துகளும் கலந்திருக்கலாம்.

அதனால் இதுதான் பின்லாந்து கல்விமுறை என்றும் இதுவே இறுதியானதும் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இத்தொடர் ஓர் அறிமுகம் மட்டுமே.

தொடர் நிறைவடைந்தது.

ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore.

Leave a comment