புதைந்து கிடக்கும் பெருவாய்ப்பு

 

இந்தக் காணொளியை நான் பலமுறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போது புதுப்புது ரசனை தருகிறது. இந்தக் குழந்தையின் உணர்ச்சி மாற்றத்தை, குரல் ஏற்றத்தாழ்வை, உடல் மொழியை, கண்கள் விரிந்து சுருங்குவதை… பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்பப்பா… அற்புதம்… அதியற்புதம்.
இக்குழந்தை பெரியவர்களைப் பார்த்து இது போல் பேசக் கற்றுக்கொண்டது என்று ஏற்றுக்கொள்ள என்னால் முடிவதில்லை.
தொலைவிலுள்ள ஒருவருடன் பேச இந்தக் கருவி பயன்படுகிறது என்பதையும் அதைப் பயன்படுத்தி பெற்றோர்களும் பெரியவர்களும் பேசுகிறார்கள் என்பதையும் குழந்தை பார்த்திருக்கலாம். ஆனால் இந்தக் குழந்தை பேசத் தொடங்கிய பின்பு அது பிறரைப் போல் நடிக்கவில்லை. தன்னை மறந்து பேசுகிறது. அந்தத் தொலைபேசியில் மெல்ல ஒருமுறை தட்டுகிறது. பாருங்கள். அது பெரியவர்கள் செய்யாதது. இயல்பினும் இயல்பு. அதையறியாமல் செய்கிறது. வேறொருவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா என்று இரண்டு பேருடைய பேச்சைப் பேசுகிறது.
சரி… அப்படியே பெரியவர்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டது என்றே வைத்துக்கொள்வோம். இப்படியொன்றைக் கற்றுக்கொள்ள அதற்கு உதவியது எதுவாக இருக்கும்? இவ்வளவு நுணுக்கமாகக் கற்கும் அளவுக்கு திறமை இருக்கும் வயதா இது? இந்தக் குழந்தைக்கு எவ்வளவு வயது இருக்கும்? பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்தா இதைக் கற்றுக்கொண்டது?
நாம் எங்கே நம் மூளையைப் பயன்படுத்தி ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறோம். அப்படி செய்த அனுபவம் இருந்தால்தானே இதை அந்த அனுபவத்துடன் ஒப்பிட முடியும்? அல்லது திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனமாவது வேண்டும்.
இதற்கெல்லாம் அக்குழந்தைக்கு உதவியது எது தெரியுமா?
இரண்டு கைகளாலும் ஏந்தக் கூடியது. வெறும் ஒன்றரைக் கிலோவுக்கும் குறைவு எடையுள்ளது. ஜெல்லி போன்றது. அதுதான் மனித மூளை.
பத்தாயிரம் கோடி நியூரோண்கள் எனப்படும் நரம்புச் சிற்ற்றைகள் கொண்டது. ஒவ்வொரு நரம்புச் சிற்றறையும் மற்றொரு சிற்றறையுடன் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வழிகளில் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது. அது ஒவ்வொரு அனுபவத்தையும் பதிவு செய்து வைக்கிறது. அதன் அடிப்படையில் யோசிக்கிறது. கற்பனை செய்கிறது. நான் கற்பனை செய்கிறேன் என்பதையும் கற்பனை செய்கிறது. சிந்திப்பது எப்படி என்பதையும் சிந்திக்கிறது. அணுவிலிருந்து அண்டவெளிவரை இதற்குள் அடங்குகிறது. கடவுளும் கணினியும் மொழியும் கலையும் எல்லாம் இதற்குள் அடங்குகின்றன. அல்லது இதற்குள் அடங்காதது எதுவுமே இல்லை.
அவ்வளவு அற்புதமானது மூளை
இதுவே இறைவன். இந்த இறைவன் எல்லோருக்கும் அருள் பாலிக்கிறான்.
ஆனால் இதன் அபரிமிதமான ஆற்றலைப் புரிந்துகொள்ளாத நாம் ப ப ப என்று கத்திக்கொண்டிருக்கிறோம்.
சில தகவல்களைச் சொல்லிவிட்டு நாம் சொன்னதையே திருப்பிச் சொல்ல வைத்துக்கொண்டிருக்கிறோம்.
பலவழிகளில் நமக்குத் தன் திறமையைத் தெரிவித்தாலும் நாம் ஒத்துக்கொள்ள மாட்டோம். நாம் நினைக்கும் வழியில்தான் திறமையைத் தெரிவிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம்.
மூளையின் ஆற்றலைத் தொலைத்த நாம் மழலை மூளையின் ஆற்றலைத் தொலைக்கும் வேலையை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறோம்.
சரி புத்தாண்டு வருகிறதாம். அந்தப் புத்தாண்டில் சில தீர்மானங்கள் எடுப்பார்களாம். அதை ஆண்டு முழுவதும் கடைப்பிடிப்பார்களாம். அப்படியானால் இந்தப் புத்தாண்டில் நாம் குழந்தைகளைப் பார்க்கும்போது… அவர்கள் அபரிமிதமான ஆற்றல் கொண்ட மூளையின் சொந்தக்காரர்கள் என்ற புதுப்பார்வையோடு அவர்களை அணுகுவோம்.
குழந்தை என்பது அளவிட முடியாத பெருவாய்ப்பின் மறுபெயர். குறுகிய அளப்பானால் அவர்களை அளக்க முயற்சி செய்யாமலிருப்போம்.

நிறைய குழந்தைகள் நம்மைப் பார்த்து நெருங்கி வந்து அகம் மலர முகம் மலரட்டும்.
அனைவருக்கும் Qrius Learning Initiatives ன் புத்தாண்டு வாழ்த்துகள்

ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore
தொடர்புக்கு
வேலவன் – 9994196113

Advertisements

2 thoughts on “புதைந்து கிடக்கும் பெருவாய்ப்பு

  1. Let us allow children to express their potential in different ways. Let us give them that freedom through changes in our approach to teaching.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s