வேலிக்குள் நிற்குமா மனம்?

 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பெடுக்க வந்த ஆசிரியரைச் சுற்றி நின்று நடனமாடி அவரைக் கேலி செய்து வகுப்பெடுக்கவிடாமல் தடுத்த ஒரு காணொளி கண்டேன்.

• மாணவர்கள் ஓர் ஆசிரியரைச் சுற்றி நடனமாடி, நக்கல் செய்து, அவரை வகுப்பெடுக்கவிடாமல் தடுக்கும் அளவுக்கு வெறுப்பு வந்தது ஏன்?
• அந்த ஆசிரியரால் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற முடியாமல் போனது ஏன்?
• இது பன்னிரண்டாம் வகுப்பில் மட்டுந்தானா? பிற வகுப்புகளிலும் இது நடக்கிறதா?

எல்லா வகுப்பிலும் இது பல்வேறு வழிகளில் இது நடக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பருவம் என்பது பயவுணர்வு குறைந்து, வருவது வரட்டும் என்ற துணிச்சல் துளிர்விடும் பருவம். அதனால் சட்டென அவர்களால் இதுபோன்று தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடிகிறது. எதிர்த்துப் பேச முடிகிறது. இறுதித் தேர்வு முடிந்து வரும் வேளையில் ஆசிரியரின் முகத்தை நேரடியாகப் பார்த்து நாலு வார்த்தை நறுக்கென்று கேட்க முடிகிறது.

பிற வகுப்புகளில்….

ஆசிரியரைப் பார்த்து அதிக மரியாதை காட்டுவது, முதுகுக்குப் பின்னால் சிரிப்பது, தங்களுக்குள் அவரைப் பற்றி கேலி செய்து மகிழ்வது, எதுவுமே தெரியாததுபோல் கேள்வி கேட்பது. தெரிந்த பதிலாக இருந்தாலும் சொல்லாமல் கடுப்பேற்றுவது… போன்றவை 7 முதல் பத்துவரையுள்ள வகுப்புக் குழந்தைகள் செய்வார்கள்.

கீழ்வகுப்புக் குழந்தைகள் ஆசிரியரைச் சட்டை செய்யாமல் அவர்களின் உலகத்தில் இருப்பார்கள். இங்கே பாரு, சைலன்ஸ், எல்லாரும் கேளுங்க… என்று கத்த வைத்து விடுவார்கள். கடைசியில் எதையோ கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டு எல்லோரும் எழுதுங்க என்ற உத்தியைக் கையில் ஆசிரியர் கையில் எடுப்பார். ஓர் நிம்மதிப் பெருமூச்சு விடுவார். குழந்தைகள் குறிப்பேடு எடுத்து எழுதுவதற்கு ஆயத்தமாவதற்குள் மணியடித்துவிடும்…. ஏன் எழுதுகிறோம் என்று குழந்தைகளுக்கும் தெரியாது. அவற்றை ஏன் எழுத வைக்கிறோம் என்று ஆசிரியருக்கும் தெரியாது.
எழுத்து என்ற ஒரு செயல்பாடு மட்டும் வகுப்பறையில் இல்லாவிட்டால் கீழ்வகுப்பு ஆசிரியர்கள் பலர் தலைசுற்றி மயக்கம்போட்டு வகுப்பறைக்குள்ளேயே விழுந்துவிடுவார்கள். பாறையை உடைத்து பொடியாக்குவதும் பத்து நிமிடம் வகுப்பறையில் நிற்பதும் சமம் என்று உணர்ந்தவர்கள்.

எங்கே நாம் தவறு செய்கிறோம்? எதனால் இப்படி?

குழந்தைகள் வளர்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு மாற வேண்டிய தேவையில்லை. ஆனால் நான்கு சுவர்களுக்குள் நாற்பது மாணவர்களை வைத்து கற்றுக்கொடுக்கிறேன் என்று வரும் ஒருவர் அவசியம் மாற வேண்டியிருக்கிறது.

பள்ளிக்கூடம், பாடத்திட்டம், கற்பித்தல், தேர்வு, மதிப்பெண், வகுப்புயர்வு… என்ற இந்த வரிசையில் கற்பித்தல் என்ற ஒன்றைத் தவிர பாவம் ஆசிரியரால் எதையும் மாற்றிவிட முடியாது. இதையெல்லாம் புரிந்துகொண்டு ஒரு பள்ளிக்கூடம் சில மாற்றங்களை முன்வைத்தாலும் நம் அரசும் அதிகாரிகளும் விடமாட்டார்கள். அவர்களைச் சமாளிப்பதற்கு என்ன செய்வது என்று ரூம்போட்டு யோசிக்கும் பள்ளிக்கூடங்களும் உண்டு.

இது நிதர்சனமான உண்மை.

இது எதனால்…

நாலாபக்கமிருந்தும், பலவழிகளில் தகவல்கள் குழந்தைகளைத் தாக்கியவண்ணம் இருக்கின்றன. பல ஆளுமைகள் குழந்தைகளின் மனங்களில் இடம் பிடிக்கின்றனர். ஒரு பிரச்சனைக்கு விடை தெரியாவிட்டால் அதைச் சொல்லிக்கொடுக்க எம்ஐடி பேராசிரியர் வரை தயாராக இருக்கிறார். அவர் நம்மைவிட நூறுமடங்கு திறமையானவர். அவரை மிஞ்ச நினைப்பது முட்டாள்தனம். பெல் பட்டனை அழுத்தியிருந்தால் உங்களைக் கேட்காமல் தகவல்கள் மலையெனக் குவிந்திருக்கும்.

ஆனால் ஆசிரியருக்கும் ஓர் இடம் இருக்கிறது. எங்கே தெரியுமா?

• ஒரு கருத்தைப் புரிந்துகொள்ள முன் அனுபவம் தேவையென்று நினைக்கிறீர்களா?
• அந்த அனுபவத்தோடு தொடர்புபடுத்தும்போது ஒரு கருத்து ஆழமாகப் புரியும் என்று நம்புகிறீர்களா?
• ஒரே பிரச்சனையைப் பல கோணங்களில் பல இடைவேளைகளில் அணுகும்போது கருத்துப் புரிதல் ஆழமாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?
• குழந்தைகளின் விருப்பு வெறுப்புகள் ஒரு கருத்தைப் புரிந்துகொள்வதில் தாக்கம் செலுத்துகிறது என்று நம்புகிறீர்களா?
• ஒவ்வொரு குழந்தையின் கற்றல் வேகம் வேறுபட்டது என்று நினைக்கிறீர்களா?
• ஒவ்வொரு குழந்தையும் தான் புரிந்துகொண்டது சரிதானா என அடிக்கடி உறுதிப்படுத்த நினைக்கிறது என்று நினைக்கிறீர்களா?
• ஒரு கருத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போதே இது எதற்கு, இது எதோடு தொடர்புடையது, இதுபோல் வேறு எங்கோ படித்தோமோ, எனக்கு இதில் சில கருத்துகள் தெரியுமே,,, எங்கேயோ கேட்டது போலிருக்கிறதே என்றெல்லாம் குழந்தைகளும் நினைப்பார்கள் என்று நம்புகிறீர்களா?

இறுதியாக,

• சில சட்ட திட்டங்களால், ஒழுங்குமுறைகளால் கட்டம் போட்டு வேலி கட்டிய அமைப்புக்குள் குழந்தைகளால் வாழ முடியாது. அவர்களின் மனங்கள் கட்டம்போட்டுக் கட்டப்பட்ட வேலிக்குள் நிற்கா. அவை இந்த வேலியைத் தாண்டிக்கொண்டே இருக்கும் என்று நம்புகிறீர்களா?

அப்படியானால் நாலாபுறம் இருந்தும் தாக்கும் தகவல்களால் ஓர் எல்லைக்குமேல் பெரியதாக எதையும் சாதித்துவிட முடியாது. அந்தந்த நேரத்தில் ஆசிரியர் எதையெதையோ செய்ய வேண்டியிருக்கிறது. குழந்தையைப் பேசவிட வேண்டியிருக்கிறது. அந்தப் பேச்சை வழி நடத்த வேண்டியிருக்கிறது. ஆசிரியருக்கும் பெரியதாக எதுவும் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டு பேரும் சேர்ந்து கற்றுக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போட வேண்டியிருக்கிறது. அவருக்கும் தங்களைப் போல அடிக்கடி தவறு வருகிறது என்று குழந்தைகள் சந்தோஷப்பட வேண்டியிருக்கிறது.

இந்த நெகிழ்வுத்தன்மையை நாம் கற்பிக்கும் பாடங்களுக்குள் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் எங்க நேரம் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.

அதிகப்படியான பாடங்கள். பாடத்திற்குப் புறம்பான பல செயல்பாடுகள். அதனால் நேரம் குறைவு என்று புலம்பும் ஆசிரியர்களை அதிகமாகப் பார்ப்பதுண்டு. உண்மைதான். பள்ளிக்கூடங்களைக் கற்றல் கற்பித்தலுக்கான இடமாகப் பார்க்காமல் சமூக மாற்றத்திற்கான இடமாகப் பார்ப்பதால் வரும் பிரச்சனை இது. கராட்டே, யோகா, சதுரங்கம், இசை, ஓவியம், மூலிகைத் தோட்டம் அமைத்தல் போன்ற எத்தனை எத்தனை செயல்பாடுகள்.

இங்கு நம்மால் செய்யக் கூடியது எது?

ஒவ்வொரு பாடத்திலும் சில சுவையான அத்தியாயங்களை அவர்களைப் பேசவிட்டு, நேரம் எடுத்து நடத்துவதுதான் ஒரே வழி. அதற்கு அதிக நேரம் ஆகலாம். பரவாயில்லை. மெல்ல மெல்ல அந்தப் பாடத்தில் குழந்தைக்கு விருப்பம் வரும். அப்புறம் மெல்ல அது பற்றிய தகவல்களைத் தேடத் தொடங்கும். அப்போது சந்தேகம் வரும். அங்கு மட்டும் நாம் உதவினால் போதும். ஆனால் இவரிடம் சந்தேகம் கேட்கலாம். எனக்கு உதவுவார். என் அறியாமையைக் கேலி செய்ய மாட்டார் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

அதற்கு ஒரே வழி. அவர்களைப் பேசவிடுவதுதான். குழந்தைகளுக்கு நம் இடத்தைக் கொடுப்பதைத் தவிற வேறுவழியில்லை. எல்லோருக்கும் ஒரேமுறையில் பாடம் நடத்தும், ஒரு வழிப்பாதை பயணமாக கருதும் அந்த ஆசிரியரின் இடத்தை ஆன்லைன் பாடங்களுக்குக் கொடுத்துவிடுவோம். ஆன் லைன் பாடங்களை மிஞ்ச நினைப்பது முட்டாள்தனம்.

ஒவ்வொரு குழந்தையிடமும் பேசி அவருக்குத் தகுந்தாற்போல் சில மாற்றங்களைச் செய்து கொடுத்து, சில உதவிகள் செய்து, செயல்பாட்டின் கடினத்தன்மையைக் குறைக்கவும் கூட்டவும் செய்து உதவும் ஒருவர். குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்பும் ஒருவர். தன்னால் மாற்ற முடியாத சடங்கு சம்பிரதாயங்களைக் குழந்தைகளின் துணைகொண்டு அதே சடங்கு சம்பிரதாயங்களோடு எதிர்கொள்பவர். அவர் தான் ஆசிரியர்.

அப்படிப்பட்ட ஆசிரியரின் தேவை முன்னெப்போதையும் விட இப்போது அதிகம்.

அப்படி நாம் மாறினால் அவர்கள் நம்மைச் சுற்றி ஆனந்த நடனம் ஆடுவார்கள்.

ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius learning Initiatives, Coimbatore
தொடர்புக்கு
வேலவன் – 9994196113

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s