பருந்துப் பார்வை அல்லது சுதர்சனம் – 1 (கல்வி பற்றிய ஒரு குறுந்தொடர்)

 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு பள்ளி முதல்வருடன் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. சற்று விரிவான கலந்துரையாடல்.

ஒரு பெரிய பள்ளியின் தாளாளர் இவ்வாறு நேரம் ஒதுக்கி என்னுடன் பேசுவதற்கு அவரைத் தூண்டியது எது என்று யோசித்தேன்.

பயிற்சியில் நாங்கள் பேசிய கருத்துகள் வெறும் கருத்துகள் அல்லவென்பதும், அவை வகுப்பறையில் உண்மையிலே மாற்றங்கள் கொண்டு வந்துள்ளன என்பதையும் அவர் கண்கூடாகக் கண்டுள்ளார். பல பயிற்சிகளை நடத்தி, பல நிறுவனங்களின் பாடப்புத்தகங்களை நடைமுறைப்படுத்திப் பார்த்து பெரிய மாற்றங்களை உணராதவர் நீள்கதைப் பாடத்திட்ட வகுப்பில் கண்ட மாற்றங்களால் கவரப்பட்டுள்ளார்.

நம்மிடம் இருந்து ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துள்ளது என்ற நம்பிக்கை வரும்போது அடுத்தடுத்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பது இயல்புதானே. அப்படி அவர் முன் வைத்த முக்கிய பிரச்சனை.

1. நான் எதிர்பார்க்கும் திறன் கொண்ட ஆசிரியர்கள் கிடைப்பதில்லை
2. ஆசிரியர்கள் விரைவாகக் கற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அது நடப்பதில்லை.
3. ஆசிரியர்களுக்கு இடையே திறன் வேற்றுமை அதிகம்.
4. பி. எட். மற்றும் ஆசிரியப் பயிற்சி நிஜமான வகுப்பறைகளைக் கையாளத் துணைபுரிவதில்லை.
5. குழந்தைகளின் செயல்களைக் கூர்மையாகக் கவனிப்பதில்லை. அவர்களின் குணநலன்களை, கற்கும் முறையைப் பற்றிய புரிதலே இல்லை. (இந்த எதிர்பார்ப்பு எங்கள் பயிற்சியால் உருவானது என்பது எங்கள் நம்பிக்கை)
6. வகுப்பறையில் ஆசிரியர் அவசியம் தேவை என்பதால் வந்திருப்பவருள் ஒருவரைக் கட்டாயமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
7. சரி, பரவாயில்லை. அப்படித் தேர்ந்தெடுத்தவருக்குப் பாடுபட்டு பயிற்சிகள் நடத்தி, வகுப்புகளை ஆய்வு செய்து, குறிப்புகள் கொடுத்து, கற்றல் கற்பித்தல் பற்றிய புரிதல் உருவாக்கி, கூடவே திறனையும் வளரச் செய்து… மெல்ல மெல்ல நாங்கள் எதிர்பார்க்கும் ஆசிரியராவதற்கான அறிகுறி தெரியும்போது அவர்களின் தனிப்பட்ட காரணங்களால் அடுத்த ஆண்டிலிருந்து பள்ளிக்கு வரமாட்டார்கள்.

நீண்ட பெருமூச்சு அவரிடமிருந்து கிளம்ப இடையே ஒரு மௌனம் உருவானது. “ஆம். உண்மைதான். என்ன செய்ய முடியும்?” என்று அவருடைய வருத்தத்தில் நானும் பங்கு கொண்டேன்.

அதனால் அவர் தொடர்ந்து பேசத் தொடங்கினார். எல்லா ஆசிரியர்களாலும், நடைமுறைப்படுத்தக் கூடிய, வகுப்பில் மாற்றங்கள் கொண்டுவரக்கூடிய, குழந்தைகளின் கற்றலை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க முடியாதா?

(இங்கு எல்லா ஆசிரியர்களாலும் என்பதை நான் “யாரைத் தேர்ந்தெடுத்தாலும், திறன் இல்லாவிட்டாலும், கற்றல் கற்பித்தல் பற்றிய புரிதல் இல்லாவிட்டாலும்” எனப் புரிந்துகொள்கிறேன்.)

அவர் முக்கியமான பிரச்சனையின் அடியாழத்தைத் தொட்டுவிட்டார். நம் கல்விமுறை இதுபோல் ஆவதற்கான அடிப்படைக் காரணத்தைத் தொட்டுவிட்டார்.
இப்போது நான் ஒரு நிமிடம் மௌனமானேன். எங்கிருந்து தொடங்குவது, எப்படி முடிப்பது என்று அந்த ஒருநிமிடத்தில் யோசிக்கத் தொடங்கினேன். பிறகு எங்களுக்குள் நடந்த கலந்துரையாடலின் சுருக்கத்தை இங்கே குறிப்பிடுகிறேன்.

பண்டைய காலத்தில் குருகுல முறை இருந்தது. ஓர் ஆசிரியர் அல்லது குரு தன் திறமையை நிலைநாட்ட வேண்டும், அவருடைய அறிவை பறைசாற்ற வேண்டும். புகழ்பெற்ற சீடர்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் புதிய சீடர்கள் அவரைத் தேடி வருவார்கள். அங்கு சீடர்களை அடுத்த அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதே குருவின் வேலையாக இருந்தது. தன் சீடன் தன் பெயரைக் கெடுத்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்திருப்பார். அப்படி கற்க வருபவரும் சீடர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

ஆனால் தற்போது குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை நூறு விழுக்காட்டை நெருங்குகிறது. பெற்றோர்களுள் பெரும்பான்மையும் படித்தவர்களாக இருக்கிறார்கள். மக்கள் அனைவருக்கும் கல்வியின் முக்கியத்துவம் தெரிந்துள்ளது. அவர்தம் மனங்களில் எதிர்பார்ப்பு முளைத்துள்ளது. வாழ்க்கை வட்டத்திலிருந்து, வறுமைச் சுழற்சியிலிருந்து உதறி வெளியேற கல்வி மட்டுமே கைகொடுக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். அதனால் உடைமைகளை அடகு வைத்தாவது தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

இதனால் என்ன ஆயிற்று… குடும்ப வருவாயின் பெரும்பங்கும் கல்விக்குச் செல்விடும்போது மனஅழுத்தம் பெருகுகிறது. இவ்வளவு பாடுபட்டு படிக்க அனுப்பும்போது குழந்தைகள் படிக்கிறார்களா, இல்லையா என்று உறுதிப்படுத்த வேண்டுமே. இல்லாவிட்டால் வருடக்கணக்காக பாடுபட்ட பணம், சின்னச் சின்ன ஆசைகள், கேளிக்கைகள் போன்றவற்றை தியாகம் செய்து குழந்தையைப் படிக்க வைக்கும்போது அவர்கள் படிக்காவிட்டால் எங்கே வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற எண்ணம் உயர் மன அழுத்தத்திற்குக் காரணமாகிறது. இந்த அழுத்தம் பள்ளியின் மேல் குவிகிறது. அந்த அழுத்தம் சிசிடிவி வைத்து உங்கள் குழந்தைகள் வகுப்பில் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுவரை சென்றுள்ளது.

நல்ல பள்ளி இருக்கும் இடம் தேடி, இடம் மாற்றம்பெற்று, அல்லது புதுவேலை தேடி. இடம்பெயர்ந்து, வசதியான வீட்டை விட்டு, வாடகை வீட்டில் குடியிருந்து அந்த நல்ல பள்ளியென்று நினைக்கும் பள்ளியில் குழந்தையைச் சேர்க்கின்றனர். அதனால் பிற பள்ளிகள் எங்கள் பள்ளி தனித்துவமானது என்பதை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றன. புறத்தோற்றத்தில், உட்கட்டமைப்பு வசதிகளில் சீக்கிரமாக மாறுதல்களை, கவர்ச்சியை உருவாக்கின.

……………………………………………………………………
அதே நேரத்தில் பாடத்திட்டமும் பாடப்புத்தகமும் வடிவமைக்கும் அரசுகள் சில கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டன.
சிறந்த கல்வி எது என்று தெரியும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது என்பது நம் நாட்டுச் சூழலில் நடக்காத காரியம் என்பதும் தெரியும். ஆசிரியர் தன் வகுப்பறை மாணவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அதுதான் சிறந்தது என்றும் தெரியும். ஆனால் இது அழகான, நடக்காத கனவாக தெரிகிறது. அதனால் ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகள் குறைந்தது இன்ன இன்ன விஷயங்களையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று சில இலக்குகளை முடிவு செய்தது. அதற்கேற்ப பாடப்புத்தகமும் பயிற்சியும் வடிவமைக்கப்பட்டன.

ஆனால் நாம் இந்த குறைந்த அளவு இலக்குகளை அடையவே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது வேறு விஷயம் ஆனால் குறைந்த பட்ச இலக்குகளை வடிவமைத்ததால் சில அடிப்படையான, மறைமுகமான பிரச்சனைகள் உருவாயின.

அவற்றைக் கீழேவரும்படி குறிப்பிடலாம்.

1. குழந்தைகளின் திறமைகளை நாம் கருத்திற்கொள்ளவே இல்லை. குழைந்தைகள் அனைவரையும் நாம் ஒருபோலப் பார்க்கத் தொடங்கினோம்.
2. ஆசிரியர்களின் திறன் வளர்ச்சிக்கான வாய்ப்பு மிகவும் குறைந்து போனது.
3. கற்றல் என்பது நேர்கோட்டுப்பாதையில், குறிப்பிட்ட இலக்குகளை குறிப்பிட்ட காலத்தில் அடைவதுயது.
4. குறுகிய கால இலக்குகளை அடைவதுதான் கல்வி என்றானது.
5. அதற்கேற்ற தேர்வுமுறையும் உருவானது. குறுகியகலாம் என்பது மிகவும் குறுகிக் குறுகி நாளும் தேர்வு என்றுகூட மாறிவிட்டது.

மேற்குறிப்பிட்ட முறைப்படி கற்று வந்தவர்கள். அதாவது தற்போதைய பெற்றோகள் இதனாலேயே கீழ்வரும் தவறான கருத்துகளைக் கொண்டவர்களாக மாறிவிட்டனர்.

• கற்றல் என்பது நேர்கோட்டுப் பாதையில் நடப்பது.
• கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குழப்பம் இல்லாமல் தெளிவாக இருக்கவேண்டும்.
• எல்லா குழந்தைகளும் ஒரே போல் கற்றுக்கொள்வார்கள்.
• ஒரு செயல்பாட்டை நடத்தினாலே அதன் விளைவு வெளிப்பட வேண்டும்.
• யார் வேண்டுமானாலும் (ஆசிரியப் பயிற்சியில்லாத, பாடப் பொருள் மட்டும் தெரிந்திருக்கக் கூடிய) குழந்தைகளுக்குக் கற்பிக்க முடியும் (ட்யூஷன் டீச்சர் இங்குதான் வருகிறார். கற்பிக்க வேண்டாம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளத்தான் தனிப்பயிற்சிக்கு விடுகிறோம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அங்கு பின்பற்றப்படும் நேரடிக் கற்றல்முறை, திரும்பத் திரும்ப உருவிடும் கற்றல்முறை நீண்ட காலத் தீமையை விளைவிக்கும் என்பதை அறியாமல் இருக்கின்றனர்.)
• எவ்வளவு சிறு வயதில் முறையான கற்றல் தொடங்குகிறதோ அவ்வளவு நல்லது. (வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் இந்தக் காரணத்தை முதலில் சொல்வதைக் கேட்கலாம்)

இவையெல்லாம் தவறான கருத்துகள் எனில் உண்மையான கற்றல் என்னது என்ன? பெற்றோரின் தவறான புரிதலை நீக்கி புதிய கருத்தை விதைப்பது எப்படி?
(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s