பருந்துப் பார்வை அல்லது சுதர்சனம் – 2 (கல்வி பற்றிய ஒரு குறுந்தொடர்)

கற்றல் பற்றிய தவறான கருத்துகள் கொண்டவர்களாக பெரும்பான்மையான பெற்றோர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் உண்மையான கல்வி பற்றிய சரியான புரிதலோடு இருக்கும் பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களைத் தவிர்ப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதையும் யோசிக்கிறார்கள்.

ஹோம்ஸ்கூளிங், அன்ஸ்கூளிங் என்ற அமைப்புகள் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுபோல் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு உண்மையான கற்றலை தனிப்பயிற்சி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் கூடியுள்ளது.

தனிப்பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அனைவரும் சரியான புரிதல் உள்ளவர்கள் அல்லர். வேலைக்குச் சென்றுவிட்ட வீடு திரும்பும்வரை குழந்தைகளுக்கு பத்திரமான இடமாக தனிப்பயிற்சி ஆசிரியரின் வீடு திகழ்கிறது. மட்டுமல்ல அதிக நேரம் படித்தால் நன்றாகப் படிக்கலாம் என்ற தவறான கருத்துக்கு வலுச்சேர்ப்பதாகவும் தனிப்பயிற்சி அமைகிறது. பள்ளிக்கட்டணத்தின் சரிபாதியோ மூன்றில் ஒன்றையோ தனிப்பயிற்சிக் கட்டணமாகச் செலுத்தும் பெற்றோர்களையும் நான் அறிவேன்.

இங்கு மட்டும் பண்டைக்கால குருகுலக் கல்வியின் சில அம்சங்கள் தொக்கி நிற்கின்றன. குருகுல முறையில் குருவைத் தேடி சீடர்கள் வருவார்கள். எனவே குரு மிகவும் திறமையானவர் என்று சமூகத்தில் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். அவர் தன் சீடர்களை அவ்வளவு கண்ணும் கருத்துமாகக் கவனித்து, அவர்கள்தம் திறன் வளர்ச்சியில் நூறு விழுக்காட்டை எட்ட பாடுபடுகிறார். சீடர்கள் சமூகத்தில் தங்கள் திறமையைக் காட்ட, குருவின் புகழ் பரவுகிறது. இது தனிப்பயிற்சி ஆசிரியருக்கும் பொருந்தும். ஆனால் பண்டைக்காலத்தில் கல்வி கற்கச் சீடரைத் தேடிவருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வீட்டை விட்டு குருவின் இல்லத்தில் தங்கி அவருக்குப் பணிவிடை செய்து கல்வி கற்பதற்கான பொருளாதாரச் சூழல் உள்ளவர்கள் மட்டுமே கல்வி கற்கச் சென்றுள்ளனர். பிறர் பெற்றோருக்கு உதவ வீட்டிலேயே தங்கியிருக்கலாம். சமூகத்தின் உயர்தாழ்வு பற்றிய எண்ணமும் இந்த எண்ணிக்கைக் குறைய காரணமாக இருக்கலாம்.
கல்வி பற்றிய மக்களின் எண்ணம் எப்படி மாறுகிறது என்பதைப் பார்க்கலாம்.
மனித குலம் காடுகளில் வாழ்ந்தபோது விலங்குகளை வேட்டையாடுவது பெருந்திறனாக கருதப்பட்டது. சமூகமாக ஓர் இடத்தில் தங்கத் தொடங்கியபோது வேளாண்மை செய்து விளைச்சலைச் சேமிக்க வைக்கத் தொடங்கியபோது அதைக் கவர வரும் எதிரிகளையும் விலங்களையும் தாக்கி விரட்டுபவர் மிகச் சிறந்தவராக்க் கருத்தப்பட்டார். பிறகு போரிடும் திறன் போற்றப்பட்டது.

அந்தக் காலத்திலும் தனிப்பட்ட தியாகங்கள் செய்து, துறவு பூண்டு உயர் சிந்தனையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட மகான்களும் இருந்தனர். இருப்பினும் பொதுச்சமூகத்தின் புரிதல் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
போக்குவரத்து வசதிகள் வந்து, மக்கள் இடம்பெயர ஆரம்பித்தபோது, அந்தந்த சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்பவர்களுக்கும், நாடு நகரங்கள் பற்றிய வரலாறும் தகவல்களும் தெரிந்திருப்பவர்களுக்கும் மதிப்பு வந்தது. பலமொழி பேசுபவர்களுக்கு மரியாதை கிடைத்தது.

மெல்ல மெல்ல பொருளாதாரம் வளரத் தொடங்கியது. வியாபாரம் வளர்ந்தது. கணிதமும், அறிவியலும், வளரத் தொடங்கின. அதனால் தகவல்களைப் பாதுக்காக்கும் தேவை ஏற்பட்டது.

பாறைகளிலும், களிமண் பலகைகளிலும் பனையோலைகளிலும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. அதனாலேயே தகவலை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கிச் சூத்திரங்களாக மாற்றினர். பழைய கணித அளவுகளும், அறிவியலும் வேளாண் தகவல்களும் ரத்தினச் சுருக்கமாக சூத்திரங்களாக மாற இதுவே காரணம். நம் திருக்குறள் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பனையோலைகளை ஆயிரக்கணக்கில் படியெடுக்கும் முயற்சியை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு மனித முயற்சி தேவைப்படுகிறது. இந்தத் தகவல்களைத் தேடி வெளிநாட்டினர் வருடக்கணக்காக அலைந்து நடந்து வந்தனர்.

இங்குதான் நினைவாற்றல் அதியாய முக்கியத்துவம் பெறுகிறது. சூத்திரங்களை, பொன்மொழிகளை, பழமொழிகளை உருவிட்டு மனனம் செய்யும் திறன்கொண்டவர்கள் கல்வி கேள்வியில் சிறந்தவர்களாக விளங்கினர். பெரிய பெரிய தத்துவக் கருத்துகளை உருவகங்களாக, கதைகளாக மாற்றினர். அதனால் நினைவில் வைத்திருப்பது எளிதானது. நம் இருபெரும் காப்பியங்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இந்தச் சூழலில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அச்சுக்கலை தோன்றாத காலத்தில், குருவிடம் மட்டும் பாடத்தின் ஒரு படி இருக்க அதை அவர் பொக்கிஷமாகப் பாதுகாக்க, அதை அனைத்துச் சீடர்களுக்கும் கொடுக்க இயலாததால் முதலில் செய்யுள்களையும் சூத்திரங்களையும் மன்னம் செய்ய வைத்தார்கள். அதற்குப் பிறகு அவை பற்றிய “விஸ்தாரம்” நடந்தது. அலசி ஆராயப்பட்டது. இது முழுக்க முழுக்க குருவின் திறமை சார்ந்து அமைந்தது. ஒரு செய்யுளுக்கு அந்தந்த காலத்திற்கேற்ப பல பொழிப்புரைகளின் தேவை இதனால் வந்திருக்கலாம்.

ஆனால் இன்று…

எல்லாரிடமும் புத்தகம் இருக்கிறது. தகவல்களை உருவிட்டு மன்னம் செய்யும் தேவையில்லை. ஆனால் இப்போதும் குரு வாசித்துக் காட்ட, அதாவது ஆசிரியர் வாசித்துக் காட்ட, அதை வகுப்பிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் உரக்கச் சொல்ல… என்ற “பாடம் கேட்டல்” முறையே நிலைநிற்கிறது.
விரல் நுனியில் தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும் நாம் தகவல்களை நினைவுபடுத்தும் திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த முறையின் மிகவும் கீழ்நிலை என்பது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், வாசிக்கத் தெரிந்த மாணவர்கள் இருந்தும் ஆசிரியர்கள் புத்தகங்களை வாசித்துக்காட்டுவது.

இந்தக் காலத்தில் கற்றலில் நம் முன்னோர்கள் கையாண்ட அடுத்தபடியை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது “விஸ்தாரம்” செய்ய வேண்டும்.

சுருக்கமாக…

கல்வியைப் பற்றிய பார்வை காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது.
பொருளாதாரம் கற்றலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தந்த காலத்தில் ஏற்படும் சமூகத்தின் பொதுவான தேவைக்கேற்ப கல்வி பற்றிய கருத்து மாறுபடுகிறது.
இவற்றையெல்லாம் விட கல்வியில் தனிமனித விருப்பு வெறுப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

அப்படியானால் தற்காலத்திற்கான கல்விமுறை எப்படி இருக்க வேண்டும்? விஸ்தாரம் என்றால் என்ன? அதன் படிகள் என்னென்ன? அப்படியானால் உண்மையான கற்றல் என்பது என்ன?

பார்ப்போம்…

(மேற்குறிப்பிட்ட கருத்துகள் யாவும் கோர்வையாக அடுக்கப்பட்டவையல்ல. கூறப்போகும் கருத்துக்கான பின்னணியை உருவாக்கும் நோக்கில் கூறப்பட்டவை. இதை கல்வியின் வரலாறு எனக் கருத வேண்டாம். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.)

ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore
தொடர்புக்கு – வேலவன் – 9994196113

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s