எழுத்து அல்லது தலையெழுத்து

எழுதச் சொல்லும்போது வகுப்பில் நடக்கும் காட்சியைக் கவனித்திருக்கிறீர்களா? குறிப்பாக ஒன்று இரண்டு வகுப்புகளில்…

அப்போதுதான் தாகம் எடுக்கும். அப்போதுதான் கழிப்பறைக்குப் போகத் தோன்றும். அப்போதுதான் பென்சிலைச் சீவத் தோன்றும். மெல்ல நகரும் திரைப்படக் காட்சி போல் (Slow motion scenes)  குறிப்பேட்டை அவ்வளவு மெதுவாக எடுத்து வைப்பார்கள். தமிழ் வகுப்பில் கணக்குக் குறிப்பேட்டை வேண்டுமென்று எடுத்து வைப்பார்கள். பிறகு அதை உள்ளே வைப்பார்கள். பிறகுதான் தமிழ்க் குறிப்பேட்டை எடுத்து வைப்பார்கள். பக்கங்களைத் திருப்புவது கூட அவ்வளவு மெதுவாகத் திருப்புவார்கள்.

ஒரு யு, கெ. ஜி குழந்தையை கட்டம் போட்ட குறிப்பேட்டில் ஒரே எழுத்தைத் திரும்பத் திரும்ப எழுத வைத்தால் அக்குழந்தை பள்ளிக்கூடத்தை வெறுப்பது போல் வேறு எந்தக் குழந்தையும் வெறுக்காதாம். பிறகு பள்ளிக்கூடத்தை அக்குழந்தை விரும்புவது என்பது குதிரைக்கொம்புதான்.

ஆட்டோவை விட்டு இறங்கிய குழந்தை வீட்டுக்குள் நுழையாமல் வாசற்படியில் இருந்தபடி குறிப்பேட்டில் அந்த எழுத்தை எழுதிவிட்டு ம்ஹும் என்று ஒரு பெருமூச்சு விட்டு அப்பாடா என்றபடி கழுத்துப்பட்டையைத் தளர்த்தியபடி வீட்டுக்குள் நுழைவதைப் பலமுறை பார்த்திருக்கிறோம்.

வீட்டுக்குள் மகிழ்ந்து இருக்கும்போது யாராவது வீட்டுப்பாடத்தை நினைவுபடுத்திவிட்டால்… ஐயோ கடவுளே… அது கூடவே கூடாது… இதுதான அச்செயலின் மூலம் அக்குழந்தைகளை நமக்கு உணர்த்துவது…

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? எழுதப் பிடிக்கவில்லை என்பதைத்தானே… ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள்? எழுதுவது ஏன் கடினமாக இருக்கிறது?

கீழ்வரும் கருத்துகள் அனைத்தும் என் அனுமானங்கள். அறிவியல் பூர்வமாகச் சரிதானா என்று கேட்டால் தெரியாது.  

  • எல்லா உறுப்புகளும் மிகக்கூர்மையாக, ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டும்.
  • மனம் நினைப்பது போல் உறுப்புகள் வேலை செய்வதில்லை. கட்டுப்பாட்டில் இல்லை.
  • எழுதியது மாயாமல் மறையாமல் அப்படியே பல நாட்கள் கண்முன் இருக்கிறது.

நாம் ஏன் எழுத்துக்கு இவ்வளவு முக்கி்யத்துவம் கொடுக்கிறோம்?

வாழ்க்கையையே முடிவு செய்யும் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகளாக இருந்த காலத்தில் எழுத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை நாம் இன்னும் அப்படியே தக்க வைத்திருக்கிறோம்.

அந்த முக்கியத்துவம் இப்போதும் இருக்கிறதா என்பதை மறுபரிசீலனை செய்வது நல்லது.

எதற்கு எழுத வேண்டும்? எழுதுவதின் தேவையை நாம் குழந்தைகளுக்கு உணர வைத்ததில்லையோ என்று தோன்றுகிறது.

நான் நடத்திய சில செயல்பாடுகள்

ஒரு சுவையான பாடலை, நிகழ்வைக் கூறி ரசிக்கச் செய்த பின்பு சில நாட்களுக்குப் பிறகு அப்பாடல் அல்லது அந்நிகழ்ச்சி மறந்து போனதுபோல் நடித்து அது யாருக்காவது நினைவிருக்கிறதா என்று கேட்டு ஐயோ அதை எழுதி வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா என்று கேட்பதும் கலந்துரையாடுவதும் எழுத்தின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு உதவலாம்.

பிடித்ததை எழுத வைப்பது என்பது மிக மிக முக்கியம். நாம் கரும்பலகையில் எழுதியதை அப்படியே பார்த்து எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது சற்று அதிகமோ என்று தோன்றுகிறது.

நாம் ஒரு கேள்வி கேட்கிறோம். பதிலை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும் வேளையில் நாம் எதுவும் பேசாமல் அப்பதிலைக் கரும்பலகையில் எழுதுகிறோம். குழந்தைகள் கவனிப்பார்கள் என்பது உறுதி. அப்போது எழுத்து எங்கிருந்து தொடங்கி எங்கே போய் முடிகிறது என்பது மறைமுகமாக அவர்கள் புரிந்துகொள்ள இந்த உத்தி உதவலாம்.

மூன்றாவதாக அவர்களுக்குக் கருத்து தெரிகிறது. ஆனால் எழுதத் தெரியவில்லை என்ற நிலையில் நான் எழுதித் தரட்டுமா என்று கேட்டு அவர்களுடைய குறிப்பேட்டில் நாம் எழுதுகிறோம். அதுவும் அவர்கள் சொல்லச் சொல்ல எழுதுகிறோம். அப்படி எழுதும்போது அவர்கள் நம் வலது கைப்பக்கம் நின்று நாம் எழுதுவதைக் கவனிக்கும்படி சொல்வது நல்லது.

இப்படி சில நாட்கள் எழுதும்போது அவர்களுக்கு எழுத்தின் மேலுள்ள பயம் போய் மெல்ல ஆர்வம் பிறக்கலாம்.

அதுபோல் குழந்தைகள் ஓர் எழுத்தைத் தவறாக எழுதும்போது அந்த ஓர் எழுத்து மட்டும் கரும்பலகையில் இருக்கும்படி பெரியதாக எழுதினால் stroke அவர்களுக்குப் பிடிபடலாம்.

எல்லாவற்றையும் விட அவர்களுக்கு எழுதித் தெரிவித்தேயாக வேண்டும் என்ற கேள்வியை, நிகழ்வை, எண்ணத்தை ஏற்படுத்தும் விதம் நம் கலந்துரையாடல் அமைவது மிக மிக முக்கியம் என்பது என் எளிய கருத்து.

எல்லாவற்றையும் விட நாம் கொஞ்சம் பொறுமை காப்பது மிக மிக அவசியம். அவர்களின் முதல் எழுத்து மூன்று வரிகளில் இருக்கலாம். அது மெல்ல மெல்ல ஒரு வரியில் வந்து நிற்கும் அதுவரை நாம் கொஞ்சம் பொறுமை காப்பது மிக நல்லது.

எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகள் பார்க்க நாம் எப்போதாவது எழுதியிருக்கிறோமா? யோசியுங்கள்.

ஜி. ராஜேந்திரன்

மாநிலக் கருத்தாளர்

Leave a comment